கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நித்தே கிராம பஞ்சாயத்து பகுதியில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ஒரு விபத்து அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. தாவணகெரேயிலிருந்து மங்களூரு நோக்கி சுமார் 80,000 முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

இந்த மோதலின் வேகத்தில் லாரி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து சாலை முழுவதும் ஆறாக ஓடின. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகிப் பதற வைத்துள்ளன.

லாரி கவிழ்ந்தபோது சாலையில் நடந்து சென்ற குமார் என்ற இளைஞர் மீது லாரி மோதியதில், அவரது இடது கால்  நசுங்கியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கார்கலா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.