நவி மும்பையின் ரபாலே பகுதியில் ஒரு கடைக்கு பின்புறம் துணிப்பையில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர், கடையின் பின்புறமிருந்து குழந்தையின் மெல்லிய அழுகுரல் கேட்பதை உணர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரபாலே போலீசார், குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அக்குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், அதன் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து ரபாலே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எந்தச் சூழ்நிலையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக ரயில் நிலையங்கள், ஒதுக்குப்புறமான சந்துகள் மற்றும் பொதுக் கழிப்பிடங்களில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.