லக்னோவின் சலர்கஞ்சில் தன்னைக் காட்டிலும் வயது மூத்த காதலியுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வந்த சூரிய பிரதாப் சிங், கடந்த ஞாயிற்றுக்கிழமை, காதலி மற்றும் அவரது மகள்களுடன் சேர்ந்து நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது, காதலி தன் இரண்டு மகள்களையும் சூரிய பிரதாப் சிங்கை பிடித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அவர்கள் அவ்வாறே செய்த பின், காதலி கத்தியால் சூரிய பிரதாப்பின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இந்தக் கொலைக்கான காரணம் குறித்துப் காவல்துறையின் விசாரணையில் பரபரப்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. காவல்துறை விசாரணையில் காதலி அளித்த வாக்குமூலத்தில், சூரிய பிரதாப் சிங் தன் மூத்த மகளின் மீது தவறான கண்ணோட்டத்துடன் இருந்ததாகவும், தகாத முறையில் தொட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சூரிய பிரதாப் சிங், தன் இரண்டு மகள்களையும் வீட்டிற்குள் கைதிகளைப் போல ஒரு சூழலை ஏற்படுத்தி, வீடு முழுவதும் மூன்று சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கைப்பேசி மூலம் ஒவ்வொரு செயலையும் கண்காணித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தன் மூத்த மகளின் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி வீட்டில் இருக்குமாறு வற்புறுத்தியதாகவும், இதனால் இரு மகள்களும், அவரும் கோபத்தில் இருந்ததாகவும் காதலி தெரிவித்துள்ளார்.
கொலை நடந்த அன்று, சூரிய பிரதாப் சிங் தன் மூத்த மகளை அறைக்குள் அழைத்துச் சென்று பூட்டி வைத்தபோது, அவர் கத்தியுள்ளார். இந்தக் கதறலைக் கேட்டுக் காதலியும், இளைய மகளும் அங்குச் சென்றுள்ளனர். சூரிய பிரதாப் சிங் தாக்குதலில் ஈடுபட்டபோது, கோபத்தில் கத்தியை எடுத்து, மகள்களின் உதவியுடன் அவரைக் கழுத்தில் குத்தி கொலை செய்ததாக காதலி வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், இந்தக் கொலை ஒரு நாள் கோபத்தின் விளைவு போலத் தெரியவில்லை என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. மேலும், சூரிய பிரதாப் சிங் வாங்கிய அந்த வீட்டில், கணவர் இறந்த பிறகு கிடைத்த பணத்தைக் கொண்டு அந்தப் பெண் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாகவும், இதனால் அந்த வீட்டின் மீது தனக்கு உரிமை உள்ளதாகவும் அந்தப் பெண் கூறி வந்துள்ளார்.
மேலும், கணவர் இறந்த பிறகு கிடைத்த ஓய்வூதியப் பணத்தில் வாங்கிய காரையும் வைத்து அவர்களுக்குள் சண்டை நடந்து வந்துள்ளது. சூரிய பிரதாப் சிங், 12 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெண்ணின் இரண்டு மகள்களுக்கும் தனியார் ஆசிரியராகப் பாடம் எடுத்தபோதுதான் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்னர், கணவர் இறந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
