உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன் மைத்துனரால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி சானிடைசரைக் குடிக்க வைத்ததாகவும் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார்.

27 வயதான அந்தப் பெண் காவலர் தனது புகாரில், தன் மாமியார் வீட்டில் ஆண் குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி, கர்ப்பமாக இருந்தபோது “கருவின் பாலினத்தை மாற்றும்” மருந்துகளை உட்கொள்ள வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்ப்ப காலத்தில் அவர்கள் தன்னைத் தாக்கியதால், வயிற்றில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகப் பிறந்த குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கணவர், அவரது பெற்றோர், இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ்,  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணை மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு மேலும் பல பிரிவுகள் சேர்க்கப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. ஜனவரி 2023 இல் மீரட்டில் திருமணமானதாகவும், தனது குடும்பத்தினர் திருமணத்திற்காக 50 லட்சம் ரூபாய் செலவு செய்து கார் மற்றும் நகைகள் கொடுத்ததாகவும், ஆனால் மாமியார் வீட்டார் தொடர்ந்து எஸ்யூவி கார் கேட்டுத் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அண்மையில், தன் கணவர், மைத்துனியுடன் தவறான நிலையில் இருந்ததை அவர் கண்டதாகவும், அதையடுத்து இருவரும் சேர்ந்து தன்னைக் கட்டாயப்படுத்தி சானிடைசரைக் குடிக்க வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் திருமணத்தையும் குழந்தையையும் காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்து இந்தச் சித்திரவதையைத் தாங்கிக்கொண்டதாகவும், ஆனால் தன் கணவர் விவாகரத்து மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெற்றோர் மீண்டும் மீண்டும் தலையிட்ட பின்னரும் நிலைமை மோசமடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.