உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, முதலைகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அடித்து வரப்படலாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தாகியா கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்று கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக் கொண்டிருந்தபோது, ராட்சத முதலை ஒன்று அவனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.

உடனே, அருகில் இருந்த அவனது தாய் மாயா, எதையும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து, கையில் இருந்த சிறு கம்பியால் முதலையின் தாடையை தாக்கி, தன் மகனை துணிச்சலுடன் காப்பாற்றினார்.

முதலை பிடியை தளர்த்தி ஆழமான தண்ணீருக்குள் தப்பியது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 7 அடி நீளமுள்ள அந்த முதலையை பிடிக்க, கால்வாயில் மூன்று இடங்களில் வலைகள் விரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், மோதிபூர் பகுதியில் உள்ள மாதவபூர் கிராமத்தில், சைபு (45) என்பவர் தனது மனைவி சுர்ஜனாவுடன் கால்வாயைக் கடக்க முயன்றபோது, முதலை அவரது காலைக் கடித்து இழுத்தது. உடனே, சுர்ஜனா தனது புடவையை தண்ணீரில் வீசி கணவரை பிடித்து, முதலையை தாக்கினார்.

அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து தடிகளால் முதலையை விரட்டினர். இதனால் முதலை சைபுவை விடுவித்து ஓடியது. காயமடைந்த சைபு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கனமழையால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் உயர்ந்து, முதலைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் அபாயம் உள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.