மும்பையையும் அதன் புறநகர் பகுதிகளான ,பால்கர் தானே மாவட்டங்களையும் கனமழையும், வெள்ளப் பெருக்கும் தாக்கியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், மும்பை மக்களும், கார்ப்பரேட் ஊழியர்களும் பணிக்கு செல்லும் முயற்சியை கைவிடவில்லை.

இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய தெருவில் பணிக்கு செல்லும் இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ‘மும்பையின் உணர்வு’ என பெருமையுடன் பேசும் இவர், பணியை தவிர்க்க முடியாத நிலையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், பாதுகாப்பையும், உடல்நலனையும் புறந்தள்ளி வேலைக்கு முன்னுரிமை கொடுப்பதாக அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

வீடியோவில், ஒரு பெண்மணிக்கு வெள்ளத்தில் நடக்க உதவிய அந்த இளைஞர், தெருவின் வெள்ளை கோடுகளில் நடக்கும் யுக்தியை மராத்தியில் விளக்குகிறார். பின்னர், தான் ஏன் இத்தகைய மோசமான மழை நிலையிலும் பணிக்கு செல்கிறேன் என்பதை விளக்குகிறார்.

அவரது முதலாளி 17 முறையும், தாயார் 21 முறையும் அழைத்ததை காண்பிக்கிறார். “முதலாளி பணிக்கு வராவிட்டால் வேலை பறிபோகும் என எச்சரித்தார்; ஆனால், அம்மா அன்புடன் வீட்டுக்கு திரும்பி வா என்கிறார்” என்று கூறுகிறார். “பணிக்கு செல்லாவிட்டால் வீட்டை எப்படி நடத்துவேன்? இது மும்பையின் வாழ்க்கை, இங்கு யாரும் நிற்பதில்லை, இதுபோல் பலர் உள்ளனர்” என உருக்கமாக பேசுகிறார்.