கர்நாடகாவின் சித்ரதுர்காவில் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த 20 வயது மாணவி வர்ஷிதாவின் உடல், தேசிய நெடுஞ்சாலை 48-இல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, விடுதியில் விடுமுறை விண்ணப்பம் அளித்துவிட்டு வெளியே சென்ற மாணவி, திரும்பி வரவில்லை. அவரது மொபைல் போன் ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்ததால், பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, அவரது பெற்றோர் மாயமானதாக போலீசில் புகார் அளித்த நிலையில், ஆகஸ்ட் 19-ம் தேதி கோனூர் பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவியின் உடலில் ‘அம்மா’ என்ற பச்சை குத்தியிருந்ததன் மூலம் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.
போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து, மாணவியின் முன்னாள் காதலனான 21 வயது நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி மற்றொரு இளைஞருடன் நட்பு வைத்திருந்ததால், ஆத்திரமடைந்த முன்னாள் காதலர் அவரை அழைத்துச் சென்று, தனிமையான இடத்தில் தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்து, பின்னர் உடலை மோட்டார் சைக்கிளில் இருந்து எரிபொருள் ஊற்றி எரித்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை நடந்ததா? அல்லது கொலை மட்டுமா? என்பது உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியின் குடும்பத்தினர் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
