அதிமுகவின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகன் முகில், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகத் திடீரென அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் சுலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அதிமுகவில் தீவிரமாக இயங்கி வந்த இவர், ‘அம்மா பேரவை’ அமைப்பில் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்து திறம்படச் செயல்பட்டவர். இந்நிலையில், தான் கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறி, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) அவர் அதிரடியாகக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நான் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய தலைமையின் கீழ் நிலவும் உட்கட்சி அரசியல் மற்றும் அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, முதலமைச்சர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற போது, முகிலும் அவருடன் இணைந்து ஒரே கல்லூரியில் படித்தவர் என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பழைய கல்லூரி நண்பர் என்ற அடிப்படையில், முகில் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையக்கூடும் எனத் தகவல்கள் கசிந்துள்ளதால், தவெகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
