மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம், ஒட்டுமொத்த மருத்துவ உலகத்தையும் அதிர்வலையில் ஆழ்த்தியுள்ளது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து உயிரைக் காக்கும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த மர்மக் கும்பலின் வெறியாட்டத்தால், அங்குப் பணியில் இருந்த பெண் ஊழியர்கள் உயிருக்குப் பயந்து அலறியடித்து ஓடும் சூழல் உருவானது. இரவு நேரத்தில் திடீரென 10 முதல் 12 நபர்கள் கொண்ட ஆக்ரோஷமான கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது.
அங்கிருந்த மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியதுடன், பணியில் இருந்த பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போன பெண் மருத்துவர்களும் செவிலியர்களும், தங்களின் உயிரையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி ஓடிச்சென்று அங்கிருந்த கழிப்பறைக்குள் கதவைப் பூட்டிக்கொண்டு தஞ்சமடைந்தனர்.
மேலும் நள்ளிரவு நேரத்தில் பூட்டிய கதவுக்குப் பின்னால் அவர்கள் கழித்த ஒவ்வொரு நொடியும் மரண பயத்தின் உச்சகட்டமாக அமைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் போலிசார் விரைந்து வருவதற்குள் அந்த அராஜகக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. பாத்ரூமில் பயத்துடன் அடைபட்டுக் கிடந்த பெண் மருத்துவர்களையும் செவிலியர்களையும் மீட்ட போலிசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் நள்ளிரவில் அரங்கேறிய இந்த அராஜகத்தைக் கண்டித்து மருத்துவ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
