“தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகளால் தென் மாநிலங்களில் உள்ள எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதற்கு மத்திய அரசு உடனடியாகச் சட்டப்பூர்வமான உறுதிமொழியைத் தர வேண்டும்!” – தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் அதிரடியாகப் பேசியுள்ளார்.
மாநாட்டில் தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை குறித்து ஆவேசமாகப் பேசிய முதலமைச்சர் விஜய், “மத்திய அரசின் வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றி, நாட்டின் நலனுக்காக மக்கள்தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காகத் தென் மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது” எனக் கடுமையாகச் சாடினார்.
மேலும் தொடர்ந்த அவர், “மக்கள்தொகை கட்டுப்பாட்டைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தண்டனையாக எம்பிக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. எந்தவொரு மாநிலத்தின் தற்போதைய பிரதிநிதித்துவமும் குறையாது என்பதை வெறும் வாய்வார்த்தையாக இல்லாமல், சட்டப்பூர்வமான உத்தரவாதமாக மத்திய அரசு அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற இடங்கள் குறைந்து, வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தென் மண்டல மாநாட்டிலேயே மத்திய அரசுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் பேசிய இந்த அதிரடி உரை, தேசிய அரசியலில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
