மகாராஷ்டிர மாநிலத்தில் பெற்ற தாயின் கண்முன்னேயே 3 வயதுக் குழந்தையைச் மாற்றாந்தந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டு, அது கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உலகத்தில் எந்த உயிரும் செய்யத் துணியாத இந்த கொடூரச் செயல், மனித நேயத்தையும் பெற்றோர் என்ற பந்தத்தையும் முற்றிலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. பெற்ற பிள்ளையைப் போலப் பார்த்துக்கொள்ள வேண்டிய இடத்தில் இருந்த மாற்றாந்தந்தையே, அந்தப் பிஞ்சு உயிரின் மூச்சை அறுத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களைக் கடும் அதிர்ச்சியிலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த 3 வயதுக் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய அந்த மாற்றாந்தந்தை, குழந்தை சுயநினைவை இழந்து உயிரிழந்ததும் பதற்றமடையாமல் ஒரு பொய்யான நாடகத்தை அரங்கேற்ற முயன்றுள்ளான். குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது தவாறிக் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் தான் மயக்கமடைந்து விட்டதாகவும் சுற்றியுள்ளவர்களிடம் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளான்.
ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்ததோடு, குழந்தையின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்துச் சந்தேகமடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலிசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை கீழே விழுந்து இறக்கவில்லை என்பதும், அது கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பதும் அம்பலமானது.
போலிசார் நடத்திய அதிரடி விசாரணையில், மாற்றாந்தந்தை உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவனைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவித்த தாயின் கதறல், அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் பிளப்பதாக இருந்தது.
