ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூர் பகுதியில் ஒரு இளம் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ரேகானா என்பவர்   ஐதராபாத்தில் உள்ள பிஸ்மில்லா காலனியில் தங்கி அங்குள்ள ஃபங்ஷன் ஹால்களில் வெயிட்ரஸாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான அகமது சலாம் என்பவருடன் அவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களாக ரேகானா, அகமதுவிடம் தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு முன்பு, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த அகமது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேகானாவைக் குத்திக் கொன்றார்.

இதனைத் தொடர்ந்து, தனது 56 வயது தாயான ஆயிஷா பேகம் என்பவரின் உதவியுடன் செய்த தவற்றை மறைக்க முயன்றார். ரேகானாவின் உடலை ஒரு பெரிய சாக்கு மூட்டைக்குள் திணித்து, தங்களது வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்தனர். ஆகஸ்ட் 17 அன்று காலை ரகசியத் தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக அகமதுவின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது சாக்கு மூட்டையில் இருந்த ரேகானாவின் உடல் மீட்கப்பட்டது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அகமதுவும் அவரது தாயும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.