மும்பையின் மிக முக்கிய அதிவேகச் சாலையான மும்பை கடலோரச் சாலை சுரங்கப்பாதைக்குள், கார் ஒன்று தவறான திசையில் அதிவேகமாக ஓட்டிச் செல்லப்பட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியே சென்ற நபர் ஒருவர் படம்பிடித்த இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் சாலைப் பாதுகாப்பு குறித்த கடுமையான கவலைகளையும் எழுப்பியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு சுமார் 10 மணியளவில் இந்த ஆபத்தான சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது. ‘MH02 GJ 0595’ என்ற பதிவு எண் கொண்ட அந்த சொகுசு காரை ஓட்டிச் சென்ற நபர், தீவிர மதுபோதையில் இருந்திருக்கலாம் என இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்தவர் குற்றம் சாட்டியுள்ளார். அதிவேகமாக வாகனங்கள் வரும் சுரங்கப்பாதைக்குள் இப்படி எதிர் திசையில் காரை ஓட்டுவது நேருக்கு நேர் மோதி பெரும் விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும்.

ஏற்கனவே மே மாதத்தில் இதே கடலோரச் சாலையில் ஜீப் ஒன்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குப் பின்னோக்கி (Reverse) ஓட்டிச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய விதிமீறல் அரங்கேறியுள்ளது. இது போன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்களால் சாலையில் செல்லும் மற்ற அப்பாவி பொதுமக்களின் உயிர உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கொதித்துப்போயுள்ளனர்.

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இப்படி தவறான திசையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது கடுமையான குற்றமாகும். இதற்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் வாகனத்தைப் பறிமுதல் செய்யவும் ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழியுள்ளது.

“>

சமீபகாலமாக மும்பை போக்குவரத்துப் போலீசார் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ மற்றும் கார் எண் குறித்து மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.