இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வரும் ஆப்பிரிக்க இளைஞர் ஒருவரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஸ்கல் ஒலாலேயே என்ற அந்த இளைஞர், 2021-ம் ஆண்டு நைஜீரியாவின் லாகோஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அவரது வீடியோவில், “இந்தியாவில் வாழ்ந்த பிறகு, மேற்கு நாடுகளுக்கு ஏன் திரும்ப விரும்பவில்லை?” என்ற தலைப்பில், இந்தியாவை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு 10 காரணங்களை பட்டியலிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த இந்தியர்கள், “நம்ம ஊரை இவ்வளவு நேசிக்கிறாரே!” என்று பெருமிதத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
பாஸ்கல் தனது வீடியோவில், இந்தியாவில் தனக்கு மன அமைதி கிடைப்பதாகவும், மேற்கு நாடுகளில் இருந்ததைப் போல தொடர்ந்து பதற்றமும், விமர்சனமும் இல்லை என்றும் கூறுகிறார். “இங்கு என் நிறத்தை வைத்து என்னை அச்சுறுத்தலாக பார்ப்பதில்லை; வாழ்க்கை எளிமையாக உள்ளது; காட்டிக்கொள்ளும் பண்பாடோ, பொய்யான அவசரமோ இல்லை,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், இந்தியர்கள் நேர்மையாக பேசுவதாகவும், பாசாங்கு இல்லாதவர்களாகவும் இருப்பதாகவும் பாராட்டுகிறார். “என்னை கறுப்பினத்தவர் என்று இங்கு யாரும் அடிக்கடி நினைவூட்டுவதில்லை; இரவில் தெருக்களில் நடப்பது அமெரிக்காவை விட பாதுகாப்பாக உள்ளது; வாடகை, உணவு மலிவானது; வாழ்க்கை மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறது,” என்று கூறி, இந்தியாவில் வாழ்ந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
