கடந்த சில தினங்களுக்கு முன் கைலாசா நாட்டை சேர்ந்த நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் ஐநா பொதுச்சபையில் பங்கேற்றதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கைலாசா நாட்டின் ஐநாவுக்கான பிரதிநிதி என சொல்லிக்கொள்ளும் விஜய பிரியா என்ற இளம்பெண் பெண்கள் உரிமை பற்றி பேசியதாகவும் செய்தி வெளியாகியது.

இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் கைலாசாவின் பிரதிநிதியாக ஐநாவில் அமெரிக்காவைச் சேர்ந்த விஜயபிரியா இன்று(மார்ச்.3) சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஐநாவில் தான் பேசிய கருத்துகள் திட்டமிட்டு தவறாக திரித்து கூறப்பட்டுள்ளதாகவும், சில இந்து எதிர்ப்பு சக்திகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

நித்தியானந்தா மற்றும் கைலாசாவுக்கு எதிராக இந்தியாவிலுள்ள இந்து விரோத சக்திகள் வன்முறையை தூண்டுவதாகவும், வெறுப்பு பிரச்சாரம் செய்வதாகவும் விஜயபிரியா குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே இந்து விரோத சக்திகள் மீது இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.