தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை அடுத்துள்ள முத்தையன் செட்டிபட்டி பகுதியில், திருமணமான மூன்றே மாதத்தில் ஏற்பட்டக் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி மற்றும் அவரதுச் சகோதரரை, கணவனே அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தையன் செட்டிபட்டியைச் சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், நிகிலா என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, நிகிலா தனதுத் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல, நிகிலா தனது அண்ணன் விவேக்குடன் பிரதீப்பின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பிரதீப், நிகிலா மற்றும் விவேக் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சண்டையின் உச்சக்கட்டத்தில், பிரதீப் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, நிகிலா மற்றும் விவேக் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக் கொலையைப் பற்றிப் போடிநாயக்கனூர் ஊரகக் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கொலையில் ஈடுபட்டப் பிரதீப்பைக் கைது செய்தனர். மேலும், சடலங்களைத் தேனி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.