இன்றைய காலகட்டத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிக்கும் போது, இடப்பற்றாக்குறை என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவாலை முறியடிக்கும் வகையில், மிகக் குறுகிய இடத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு விசித்திரமான படிக்கட்டு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக ஒரு படிக்கட்டு அமைக்கப் பல அடி இடம் தேவைப்படும்.

 

ஆனால், இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள படிக்கட்டு வெறும் 1 முதல் 2 அடி அகலமுள்ள மிகக் குறுகிய இடத்தில் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த படிக்கட்டின் வடிவமைப்பு பார்ப்பதற்குச் சற்று விசித்திரமாக இருந்தாலும், அதன் பயன்பாடு அனைவரையும் வியக்க வைக்கிறது. வீடியோவில் ஒருவர் அந்தப் படிக்கட்டில் ஏறிச் செல்வது, இது வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, நிஜமாகவே பயன்படுத்தக்கூடியது என்பதை உறுதிப்படுத்துகிறது.

@TansuYegen என்ற எக்ஸ் தளக் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, “சிறிய இடத்தில் எப்படி புத்திசாலித்தனமாக ஒரு விஷயத்தை உருவாக்கலாம்” என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்த டிசைனைப் பார்த்த நெட்டிசன்கள், “ஏறுவதற்குச் சற்றுப் பயமாக இருந்தாலும், இன்ஜினியரின் ஐடியா சூப்பர்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.