இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியின் படித்துறைகள் எப்போதும் விசித்திரமானவை. ஆனால், அங்குள்ள ஒரு டூர் கைடு தற்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார். ‘தீப்’ என்ற அந்த உள்ளூர் வழிகாட்டி, ஜப்பானிய மொழியை ஜப்பானியர்களுக்கே சவால் விடும் வகையில் மிக சரளமாகப் பேசி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

ஒரு குழுவாக வந்த ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளிடம் அவர் உரையாடும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் வியப்பில் அவருக்கு டிப்ஸ் வழங்கியபோது, அதை மென்மையாக மறுத்த தீப், “பணத்தை விட மனிதாபிமானம் தான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

 

15 வயதிலேயே கடினமான ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய தீப், இன்று காசிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் விருப்பமான வழிகாட்டியாக மாறியுள்ளார். @sukedaitravel என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

“இந்தியர் ஒருவர் ஜப்பானிய மொழியில் பேசுவதைக் கேட்கவே இனிமையாக இருக்கிறது” என நெட்டிசன்கள் அவரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.