ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்டத்தில் உள்ள விஷ்ராம்பூர் பஞ்சாயத்தில் அமைந்திருக்கிறது ‘பஹாரா’ என்ற சிறிய கிராமம். ஆனால் இன்று இந்தக் கிராமத்தின் பழைய பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. ஊரின் நுழைவாயிலில் உள்ள ஒரு வளைவுப் பாதையில் “யூடியூப் மோட்” என்று பெரிய எழுத்துக்களில் பலகை வைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘கானி மோட்’ என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி, இன்று டிஜிட்டல் அடையாளத்துடன் மிளிர்கிறது.
ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பெயருக்குப் பின்னால் எந்தப் பெரிய ஸ்டுடியோவோ அல்லது பிரபலமான யூடியூபர்களோ கிடையாது. கிராமத்து இளைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த மலிவு விலை இன்டர்நெட்டைப் பயன்படுத்தி, இந்த அழகான வளைவுப் பாதையைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்தப் படங்கள் வைரலானதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ‘யூடியூப் வளைவு’ என்று பெயரிட்டுவிட்டனர். இன்று அந்த வழியாகச் செல்லும் பயணிகள் அனைவரும் வண்டியை நிறுத்தி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தவறுவதில்லை. இன்டர்நெட் ஒரு சாதாரண கிராமத்தையே உலக வரைபடத்தில் எப்படி மாற்றியமைக்கும் என்பதற்கு இந்த “யூடியூப் கிராமம்” ஒரு சிறந்த உதாரணம்.
