குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) 2026கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், கொல்கத்தா டைகர்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சிங்கம்ஸ் அணி முதல் முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றியது.
லால்பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணியின் கேப்டன் அங்கூர் சிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் கேதன் மத்ரே 16 பந்துகளில் 30 ரன்களும், சர்பராஸ் கான் 20 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் சென்னை அணி 10 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது.
104 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா டைகர்ஸ் அணியின் பேட்டிங் வரிசை, சென்னை அணியின் இறுக்கமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து சரிந்தது. அந்த அணியின் அரிஷ் கான் 25 ரன்கள் எடுத்துப் போராடிய போதிலும், 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சிங்கம்ஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணிக்கு ரூ. 2 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூ. 1 கோடியும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் பலர் விருது வாங்கினார். அதன்படி,
ஆட்ட நாயகன்: கேதன் மத்ரே (சென்னை சிங்கம்ஸ்)
தொடர் நாயகன் (MVP): ஜெகநாத் சர்க்கார் (சென்னை சிங்கம்ஸ்) – இவருக்குப் பரிசாக விலையுயர்ந்த ‘போர்ஷே 911’ கார் வழங்கப்பட்டது.
சிறந்த பேட்டர்: சைஃப் அலி (டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா)
சிறந்த பந்துவீச்சாளர்: பர்வீன் குமார் (ஹைதராபாத்)
இந்த வெற்றியின் மூலம் சென்னை சிங்கம்ஸ் அணி தனது முதல் ஐஎஸ்பிஎல் மகுடத்தைச் சூடியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களை அந்த அணியின் உரிமையாளர் சூர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
