ஜிம்பாப்வேயின் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், 14 வயதேயான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்தியமான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது. வைபவ் வெறும் 80 பந்துகளில் 15 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே அதிகபட்ச தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்தார்.
அவர் தனது சதத்தை வெறும் 55 பந்துகளில் எட்டியதுடன், 150 ரன்களை 71 பந்துகளில் கடந்து அதிவேக 150 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
412 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேலப் பால்கனர் மட்டும் அதிரடியாக ஆடி 67 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில்:
“சாம்பியன்கள்! இந்தப் இளம் அணியையும் அவர்கள் ஆடிய அச்சமற்ற கிரிக்கெட்டையும் கண்டு பெருமைப்படுகிறேன். பயிற்சியாளர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள். ‘சூர்யவன்ஷி’ (Sooryavanshi) இருக்கும்போது, அங்கே ஒரு காலத்தால் அழியாத பிளாக்பஸ்டர் வெற்றியை எதிர்பார்க்கலாம்! சிறப்பாக விளையாடினாய் வைபவ் என்று பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தத் தொடரில் மொத்தம் 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த டெவால்ட் ப்ரீவிஸின் (18 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்தார். மேலும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே தலைமையில் விளையாடிய இந்திய இளம் அணி தற்போது தொடர்ந்து ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றுள்ள நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
