ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த 17 வயது மாணவர் முகமது பாகிம், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். தினமும் பள்ளிக்குப் பிறகு தர்கா வளாகத்தில் உடற்பயிற்சி செய்வது அவருக்கு வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்யச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவசரமாக முகமது பாகிமை ஆம்புலன்ஸில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், “அவர் வரும்போதே உயிரிழந்திருந்தார்” என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

முகமது பாகிமின் திடீர் மரணத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. அவர் இதற்கு முந்தைய நாட்களில் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாரா? அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வரும்வரை மரணம் மர்மமாகவே உள்ளது.