அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லிக்குச் சென்றிருப்பதை விமர்சித்து அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் அதிமுகதான் தலைமை என்று கூறிக்கொண்டு தொகுதிப் பங்கீட்டிற்காகப் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைச் சந்திக்க டெல்லிக்கு ஓடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முந்தைய காலங்களில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை மாளிகையில்தான் கூட்டணிக் கட்சிகளை அழைத்து இடங்களை ஒதுக்குவார்கள் என்றும் அந்த மரபைத் தற்போது எடப்பாடி பழனிசாமி சிதைத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமித்ஷா அழைத்தவுடன் டெல்லிக்கு விரைவதைப் பார்க்கும்போது அது தொகுதிப் பங்கீட்டுக்கான அழைப்பா அல்லது விசாரணை அமைப்புகள் அனுப்பும் சம்மன் போன்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் எடப்பாடி பழனிசாமி பலமுறை டெல்லிக்குச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நேரு இது அண்ணா திமுகவா அல்லது அமித்ஷா திமுகவா என்று வினவியுள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழுவில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் முழு அதிகாரம் பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தீர்மானம் நிறைவேற்றியதை நினைவு கூர்ந்த அவர் தற்போது அந்தத் தீர்மானத்தை அமித்ஷாவின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு உத்தரவுக்காகக் காத்துக் கிடப்பதாக விமர்சித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் கிளைக் கழகம் போல அதிமுக செயல்படுவதாகவும் தங்களது கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதைக் கூடத் தீர்மானிக்க முடியாமல் மற்றவர் வீட்டு வாசலில் காத்திருப்பது அதிமுக தொண்டர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு டெல்லிக்கு அடிமையாக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு சாடியுள்ளார். பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் கூட எடப்பாடி பழனிசாமியின் பெயர் உச்சரிக்கப்படாமல் அவமதிக்கப்படுவதாகவும் கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் அமமுக கூட அதிமுகவைத் தலைமைப் பொறுப்பில் வைத்து மதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது என்றும் சுயமரியாதை இல்லாத இத்தகைய அடிமைக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு மீண்டும் வெற்றி பெறும் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
