தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதிரடியான கட்சித் தாவல்களும் அரங்கேறி வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் அடையாளமாகவும் திகழ்ந்த காளியம்மாள், நாளை (ஜனவரி 21, 2026) அதிமுகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாகவே சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் காளியம்மாள் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அவர் அதிமுகவைத் தேர்வு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை அவர் முறைப்படி கட்சியில் இணைகிறார். இதற்கிடையே, வரும் தேர்தலில் தனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு எடப்பாடி தரப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கல்யாண சுந்தரம் உள்ளிட்ட முக்கிய முகங்களை இழந்த நாம் தமிழர் கட்சிக்கு, காளியம்மாளின் இந்த முடிவு அடுத்தடுத்த பேரிடியாக அமைந்துள்ளது.