தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தில் அனலைப் பறக்கவிட்டு வருகிறது. கட்சித் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜனவரி 21, 2026) சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரசாரக் குழுவினர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மாநில மற்றும் மாவட்ட வாரியாக எப்படிப்பட்ட பிரசாரங்களை முன்னெடுப்பது, ஆலோசனைக் கூட்டங்களை எப்போது நடத்துவது என்பது குறித்து விரிவான ‘ப்ளூ பிரண்ட்’ (Blue Print) இந்தக் கூட்டத்தில் தயாரிக்கப்பட உள்ளது.

குறிப்பாக, மக்கள் மத்தியில் தவெக-வின் கொள்கைகளை எளிய முறையில் கொண்டு சேர்ப்பது மற்றும் பூத் கமிட்டி பணிகளை வலுப்படுத்துவது குறித்து விஜய் ஏற்கனவே சில ரகசிய திட்டங்களை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி ஆக்‌ஷன், மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் இப்போதே கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.