ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கமும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தெரிகிறது.
வைத்திலிங்கத்துடன் சேர்த்து, மற்றொரு முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜனும் நாளை திமுகவில் இணைய இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லாததாலும், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படுவதாலும் இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், ஜெயலலிதா அமைச்சரவையில் வனத்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.
அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், தற்போது திமுகவில் இணையப் போவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இந்த மாற்றம் ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
