பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது, சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம் என்று கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்தியாவுடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதலின்போது வெளியிடப்பட்ட ஒரு சமூக வலைதள பதிவு குறித்து அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதிவில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தியாவுடன் அடுத்த முறை போர் தொடர்ந்தால், தாங்கள் எவ்வாறு செயல்படுவோம் என்பதை காட்டவே அந்த பதிவை வெளியிட்டதாக அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டலின் மூலம், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான, குஜராத்தின் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலையை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு, இந்தியாவுடனான பதற்றமான உறவுகளை மேலும் மோசமாக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய பொருளாதார மையமான ரிலையன்ஸ் ஆலையை குறிவைப்பதாக விடுக்கப்பட்ட இந்த மிரட்டல், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடையும் சூழலை உருவாக்கியுள்ளது.