தமிழகத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் முழுமையாக அமல்படுத்தத் தவறிய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைப்பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டாஸ்மாக் பணியாளர்களின் எதிர்ப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் காரணமாக கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மதுபாட்டில்களில் கியூ ஆர் கோடு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மே மாதம் வரை அவகாசம் வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அரசுத் தரப்பின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு, ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசத்தைப் பயன்படுத்தாததைச் சுட்டிக்காட்டினர்.

பணியாளர்களின் எதிர்ப்பை அரசு பேசித் தீர்த்திருக்க வேண்டும் என்றும், நாள்தோறும் 2 கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகும் நிலையில் இந்தத் தாமதத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இறுதியாக மே மாதம் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதற்குள் திட்டத்தைச் செயல்படுத்தாவிட்டால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் வீதம் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடாக வசூலிக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஜூன் 5ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.