தங்கம் விலையும், பெட்ரோல் விலையும் விண்ணைத் தொட்டு வரும் நிலையில், இப்போது விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், இந்தியாவின் முன்னணி நிறுவனமான இண்டிகோ (IndiGo) நாளை முதல் ‘எரிபொருள் கூடுதல் கட்டணம்’ (Fuel Surcharge) என்ற பெயரில் டிக்கெட் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. “விலை உயர்வு தவிர்க்க முடியாதது.. வேற வழி இல்லை!” என கைவிரித்துள்ள இண்டிகோ நிறுவனம், ஒரு டிக்கெட்டுக்கு 425 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

​இந்த அறிவிப்பின்படி, நீங்கள் உள்நாட்டிற்குள் பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 425 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டும். இதுவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு 900 ரூபாயும், தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு 1,800 ரூபாயும் கூடுதலாகச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்பவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 2,300 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏர் இந்தியா ஏற்கனவே விலையை ஏற்றிய நிலையில், இப்போது இண்டிகோவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கப் பயணிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.