அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி நீரணைப் பகுதியை ஈரான் மூடியுள்ளது. இந்த இக்கட்டான நிலையிலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்களை எவ்வித ராணுவ மோதலும் இன்றி அந்த கடல் வழியாக பாதுகாப்பாக கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் இந்த அபாரமான ராஜதந்திர வெற்றியை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி பாராட்டியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் நாட்டு கப்பல்கள் ஈரானால் தடுக்கப்பட்டும் தாக்கப்பட்டும் வரும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் மேற்கொண்ட மூன்று தொலைபேசி அழைப்புகளின் மூலம் இந்தியக் கப்பல்களுக்குத் தனிப் பாதையை உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த மார்ச் 8ம் தேதி ஹார்மூஸ் ஜலசந்தி நீரணைக்குள் நுழைந்த ஷென்லாங் என்ற கச்சா எண்ணெய் கப்பல், பொது கண்காணிப்பு அமைப்பில் இருந்து மறைந்த போதிலும் இந்தியாவின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்புடன் பாதுகாப்பாக மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய கப்பல்களும் வெற்றிகரமாக இந்த நீரணையைக் கடந்துள்ளன. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் பாதியளவு கச்சா எண்ணெய் இந்த வழியாகவே வருவதால், தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா மேற்கொண்ட இந்த ராஜதந்திர நகர்வு ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது 28 இந்தியக் கப்பல்களும் நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகளும் அரசின் நேரடி கண்காணிப்பில் அந்தப் பகுதியில் பாதுகாப்பாக இயங்கி வருகின்றனர்.