பிகார் மாநிலம் கட்டிஹார் மாவட்டம் ரோஜித்பூர் பகுதியில், இரண்டு மனைவிகளுக்கு இடையே சிக்கிய கணவரால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது. கணவரை தங்களுடன் அழைத்துச் செல்ல இரு பெண்களும் ஒருவரை ஒருவர் போட்டிப்போட்டு இழுத்தனர். இதைப் பார்க்க அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். சில மணி நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் பொதுமக்கள் தலையிட்டு மூவரையும் சமாதானப்படுத்தினர்.
கட்டிஹார் மாவட்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட குமாரிபூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி ரவிதாஸ். இவருக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரியங்கா என்பவருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கெனவே திருமணமான முனி என்ற பெண்ணுடன் விக்கிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. முனிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். விக்கிக்கும் தனக்கும் சுமார் 5 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாக முனி தெரிவித்துள்ளார்.
விக்கி தனக்காக வாடகைக்கு ஒரு அறை எடுத்துக் கொடுத்ததாகவும், அந்த அறையில் இருவரும் திருமண சடங்குகளை செய்துகொண்டதாகவும் முனி கூறியுள்ளார். இதனால் தனது கணவரின் நடவடிக்கைகளில் பிரியங்காவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கணவரை ரகசியமாக பின்தொடர்ந்த அவர், ரோஜித்பூர் பகுதியில் உள்ள அந்த வாடகை அறைக்கு சென்றுள்ளார். அங்கு விக்கி, முனியுடன் இருப்பதைப் பார்த்ததும் பிரியங்கா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் நடுரோட்டுக்கு வந்தது. பிரியங்கா தனது கணவரை தன்னுடன் வருமாறு கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் முனியும் தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு விக்கியிடம் தன்னுடன் இருக்குமாறு கூறினார். இருவரும் விக்கியை தங்களது கணவர் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த காட்சியைப் பார்க்க பொதுமக்கள் கூட்டமாகத் திரண்டனர்.
இந்த நிலையில், விக்கி ரவிதாஸ் இருவரையும் திருமணம் செய்துள்ளதாகவும், இரண்டு மனைவிகளையும் ஒன்றாக வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மூவரிடமும் பேசி அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான விடியோ வெளியாகியுள்ள நிலையில், கட்டிஹார் மாவட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
