மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரைச் சேர்ந்தவர் தீபாலி மானே. இவருக்கும் மகாராஷ்டிர மாநிலம் வாஷிமைச் சேர்ந்த ராணுவ வீரரான தியானேஷ்வர் மதனே என்பவருக்கும் சுமார் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 மாதங்கள் வரை இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு கணவர் தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாக தீபாலி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

தியானேஷ்வர் கொல்கத்தாவில் பணியில் இருந்தபோது தீபாலியை துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் தீபாலிக்கு ஃபினாயில் குடிக்க வைத்து, பின்னர் தூக்கில் தொங்கவிட முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது செல்போனையும் கணவர் உடைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீபாலி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் பேசி பிரச்னையை சமாதானப்படுத்தியுள்ளனர்.

அப்போது தியானேஷ்வரின் தந்தை நந்து மதனே, தீபாலியின் தந்தை அனில் மானேவிடம் இனி தனது மகளை தானே பார்த்துக்கொள்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி தீபாலி மீண்டும் கணவர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே 7 மாத கர்ப்பிணியான தீபாலிக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி வாஷிமில் சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் தீபாலியை புர்ஹான்பூருக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் விரும்பியுள்ளனர்.

ஆனால், தீபாலியை அழைத்துச் செல்ல கணவர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி தீபாலி கீழே விழுந்து காயமடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக வாஷிமுக்குச் சென்றனர். அங்கு போலீஸார் தீபாலி உயிரிழந்துவிட்டதாகவும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர். சீமந்தம் நடைபெற்ற 4 நாள்களிலேயே இந்த சம்பவம் நடந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து தீபாலியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் தியானேஷ்வர் மதனே, மாமனார் நந்து மதனே மற்றும் மாமியார் இந்து மதனே ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தீபாலியின் குடும்பத்தினர், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் புர்ஹான்பூர் மற்றும் வாஷிம் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.