உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த இந்தச் சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பிரீதம் சிங் என்பவருக்கும், 18 வயதான ரிம்ஜிம் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் தான் கோலாகலமாகத் திருமணம் நடந்தது. ஹோலிப் பண்டிகைக்காகத் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை, ஆசை ஆசையாக அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பியுள்ளார் பிரீதம் சிங். மார்ச் 9-ம் தேதி பிலாரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, “எனக்கு பசிக்குது.. சூடா பக்கோடா வாங்கிட்டு வாங்க” என கணவரிடம் செல்லமாகக் கேட்டுள்ளார் ரிம்ஜிம்.

​மனைவியின் ஆசையை நிறைவேற்ற ஆசையோடு பக்கோடா வாங்கச் சென்ற பிரீதம் சிங், கையில் சூடான பக்கோடாக்களுடன் திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். சில நிமிடங்களுக்கு முன்பு வரை அருகில் இருந்த மனைவியைக் காணவில்லை! பேருந்து நிலையம் முழுவதும் தேடி அலைந்தும் அவர் கிடைக்கவில்லை. “என் மனைவி வேறொரு இளைஞருடன் ஓடிப்போயிருக்கலாம்” எனப் பிரீதம் சிங் கதறியபடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கைக்கு எட்டிய பக்கோடா வாய்க்கு எட்டாமல் போன கதையாக, மனைவியைத் தேடிப் போலீஸார் இப்போது சிசிடிவி காட்சிகளை சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.