இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் 403 ரன்கள் (ஒரு சதம் உட்பட) மற்றும் 5 விக்கெட்டுகள், 3 டி20 போட்டிகளில் 15 ரன்கள் எடுத்தவர்.
2011-ல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில், 5-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து 4-1 தொடர் வெற்றிக்கு உதவினார். 2012-ல் இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி மற்றொரு வெற்றியை பெற்றுத் தந்தார்.
ஆனால், திறமை இருந்தும் அணியில் நிலையான இடம் கிடைக்காமல், 2023-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
சமீபத்திய பேட்டியில், அணியில் நிலையான இடம் கிடைக்காததற்கு அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அணி நிர்வாகத்தை குற்றம்சாட்டினார்.
“எனக்கு ஏன் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்கு தோனி, பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர், தேர்வுக்குழுவினர்தான் பதில் சொல்ல வேண்டும். ஒருவேளை தோனிக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம்,” என்று திவாரி தெரிவித்தார்.
“தோனி தனக்கு விருப்பமான சில வீரர்களுக்கு முழு ஆதரவு அளித்தார். நான் 100 ரன்கள் எடுத்த பிறகும் வாய்ப்பு தரப்படவில்லை. அவரை சந்தித்தால் இதை கேட்பேன்,” என்று உருக்கமாக கூறினார்.
தோனியின் தலைமைத்துவத்தை பாராட்டிய திவாரி, தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். கிரிக்கெட்டில் விருப்பு-வெறுப்பு பாகுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
