அண்டர்-19 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் தனது அற்புதாமான திறமையால் அனைவரையும் கவர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் அறிமுகமாவதற்கு முழுமையாகத் தயாராகியுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவரது வருகை பற்றிய பேச்சுக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானுமான குமார் சங்ககரா, வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஒரு சுவாரசியமான நெகிழ்ச்சி சம்பவத்தை ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கௌஹாத்தியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமின் போதுதான் சங்ககரா மற்றும் அப்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கை முதன்முதலாக நேரில் பார்த்துள்ளனர். அங்குள்ள ஒரு கடினமான நெட் பயிற்சியில், இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் பந்துவீசிக் கொண்டிருந்தனர்.
மூத்த வீரர்களே அங்கு விளையாடத் தயங்கிய வேளையில், 14 வயதே ஆன வைபவ், ‘நான் விளையாடுகிறேன்’ என்று தைரியமாக உள்ளே இறங்கினார். ஆர்ச்சரின் அசுர வேகப்பந்துகளை அவர் எதிர்கொண்ட விதம் அங்கிருந்த அனைவரையும் வாயடைக்க வைத்தது. வைபவ்வின் பேட்டிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு ஷாட்டும் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தத்தைப் போலக் கேட்டதாகவும், ஆர்ச்சர் தனது முழு வேகத்தில் வீசியும் அச்சமின்றி அவர் பவுண்டரிகளை விளாசியதை பார்த்து, ஆர்ச்சரே வியப்பில் சிரித்துவிட்டதாகவும் சங்ககரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
