ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பை ஜெயிப்பை பதிவு செய்த தலைசிறந்த வீரருமான மைக்கேல் கிளார்க், மீண்டும் தோல் புற்றுநோயால் (Skin Cancer) பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ள அவர், “இன்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். இது போன்ற கேன்சர் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாகவே உள்ளது. எனவே, அனைவரும் தங்கள் தோலை பரிசோதித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்படுவதே மிக முக்கியம்” என தெரிவித்துள்ளார். கிளார்க் இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

2006-ம் ஆண்டிலேயே தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மைக்கேல் கிளார்க், அதற்கான சிகிச்சையை பெற்றதும் மீண்டு வந்திருந்தார். பின்னர் 2019-ல் மூன்று தோல் கட்டிகள் உருவாகியிருந்ததை மருத்துவர்கள் அகற்றினர்.

அப்போது சூரிய ஒளியில் நேரடியாகச் செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை நினைவுறுத்தியிருந்த அவர், தற்போது மீண்டும் “இன்னொரு நாள், இன்னொரு கேன்சர் கட்டி என் முகத்தில் இருந்து அகற்றப்பட்டது” என கூறியிருக்கிறார். “நான் ஒரு தந்தையாக இருக்கின்றேன். என்னுடைய ஏழு வயது மகளுக்காக நான் இருக்க வேண்டும். எனவே, வெயிலில் செல்லும்போது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வேன்” என்றார்.

தற்போது 44 வயதாகும் மைக்கேல் கிளார்க், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 115 டெஸ்ட் போட்டிகளில் 8,643 ரன்களையும், 245 ஒருநாள் போட்டிகளில் 7,981 ரன்களையும், 34 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். 28 சதங்கள் மற்றும் பல அரை சதங்களுடன் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்தார்.

அதன்பின் நடைபெற்ற ஆஷஸ் தொடரை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போதைய நிலையில், அவரது நோய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும், அவர் விரைவில் முழுமையாக பூரண குணமடைய ரசிகர்கள் நலன் வாழ்த்தி வருகின்றனர்.