ஜெய்ப்பூர் நகரில் ஒரு வித்தியாசமான சுவரொட்டி இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நோய்கள், கல்வி, சமூக சேவைகளுக்காக நன்கொடை கேட்கப்படும் நிலையில், இப்போது ஒரு இளைஞர் தனது காதலியுடன் வெளியே செல்ல நன்கொடை கேட்கிறார்.
“உங்கள் காதலியுடன் வெளியே செல்ல விரும்பினால், தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்ற வாசகத்துடன், அந்த சுவரொட்டியில் UPI ஸ்கேனிங் QR குறியீடும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜெய்ப்பூரின் முக்கிய சுற்றுலா பகுதிகளான பத்ரிகா கேட், உலக வர்த்தக பூங்கா மற்றும் கௌரவ் டவர் சிட்டி போன்ற இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை பார்த்த சில இளைஞர்கள் உண்மையில் QR ஸ்கேன் செய்து நன்கொடை அளிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
இந்த முயற்சி ராகுல் பிரஜாபத் என்ற இளைஞரால் தொடங்கப்பட்டுள்ளது. காதல் செலவுகளை மையமாகக் கொண்டு பிச்சை கேட்கும் இந்த செயல் ‘பிரேமி ஸ்டார்ட்அப்’ என்ற நகைச்சுவையான பெயருடன் வைரலாகியுள்ளது.
இந்த சுவரொட்டியைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கேலியாகவும், சிலர் ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், “காதலில் விழுந்தேன், செலவுகளுக்கு பயந்தேன்… இப்போது பிச்சை எடுத்து ஏற்பாடு செய்கிறேன்” என எழுத, மற்றொருவர், “இந்த சகோதரனுக்கு நோபல் பரிசு கொடுக்கணும்!” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை இதுகுறித்து எந்த புகாரும் காவல்துறைக்கு வரவில்லை என்பதால், அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
