அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இராஜலட்சுமி (ராஜி) யார்லகடா என்ற இந்திய மாணவி உயிரிழந்து கிடந்தது அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் (Texas A&M University-Corpus Christi) சமீபத்தில் பட்டம் பெற்றுவிட்டு, அமெரிக்காவில் வேலை தேடி வந்துள்ளார். நவம்பர் 7, 2025 அன்று அதிகாலையில் ராஜி யார்லகடா படுக்கையில் இருந்து எழாத நிலையில், அவர் தூக்கத்திலேயே இறந்தது தெரிய வந்தது.
இறந்த ராஜியின் உறவினர் சைதன்யா ஒய்விகே (Chaitanya YVK) கூற்றுப்படி, இறப்பதற்கு முந்தைய இரண்டு அல்லது மூன்று நாட்களாக ராஜிக்குக் கடுமையான இருமல் மற்றும் மார்பு வலி இருந்துள்ளது. பாபட்லா மாவட்டத்தின் கர்மேசேடு கிராமத்தைச் (Karmechedu village of Bapatla district) சேர்ந்த ராஜியின் குடும்பம் விவசாயத்தைச் சார்ந்துள்ளது.
தனது பெற்றோருக்கு உதவ வேண்டும் என்ற கனவுடன் ராஜி அமெரிக்கா வந்துள்ளார். அவரது திடீர் மரணம் குடும்பத்திற்குத் துயரத்தையும், நிதிச் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அவரது இறுதிச் சடங்குச் செலவுகள், உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருதல், கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பெற்றோருக்கு நிதியுதவி செய்தல் போன்றவற்றுக்காக நண்பர்கள் மூலம் ‘கோஃபண்ட்மீ’ (GoFundMe) இணையதளத்தில் நிதி திரட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
