மேற்கத்திய தடைகளைப் பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் கூடுதல் வரியை அவர் விதித்துள்ளார்.
இந்தச் சூழலில், பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநருமான ரகுராம் ராஜன், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான ‘மிகவும் பாராட்டப்பட்ட நட்பு எங்கே?’ என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிகாகோ கவுன்சில் ஆன் குளோபல் அஃபேர்ஸ் நடத்திய உரையாடலில் பேசிய ரகுராம் ராஜன், “கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருவதை நம்புவது ஏமாற்றமளிக்கிறது” என்று கூறினார். மேலும், “அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துவிட்டு, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரி மட்டுமே விதிக்கிறது.

அப்படியெனில் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையே பாராட்டப்பட்ட நட்பு எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்காவை நம்ப முடியாது என்பதற்கான வரலாற்று உதாரணத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 1971 இந்திய-பாகிஸ்தான் போரின்போது, அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஏழாவது கடற்படையை அனுப்பியதை அவர் நினைவூட்டினார்.
அப்போது சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியதுதான், நாட்டை 25 ஆண்டுகள் சோவியத் முகாமில் வைத்திருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
