லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் போர் தாக்குதல்கள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா சரியாக நிறைவேற்றாததைக் கண்டித்து, உலக அளவில் மிக முக்கியப் பொருளாதாரப் பாதையாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் ஜலசந்தி’யை (Strait of Hormuz) ஈரான் நாடு மீண்டும் அதிரடியாக மூடியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், எந்தவொரு சர்வதேசக் கப்பல்களும் தங்களின் எல்லைக்கு அருகில் வர வேண்டாம் என்றும், மீறி வந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று லெபனான் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் போரை நிறுத்த ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, இந்த ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட மூன்றே நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியின்படி இஸ்ரேல் தனது அக்கிரமங்களை நிறுத்தவில்லை என்றும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை இந்த வழித்தடம் மூடப்பட்டிருக்கும் என்றும், இதையும் மீறி இஸ்ரேல் அராஜகம் செய்தால் அதன் மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல் நடத்தும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திப் பதற்றத்தைத் தணிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் மிக முக்கிய கடல் வழித்தடம் இது என்பதால், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது உலக அளவில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தையும், கடுமையான எரிசக்திப் பற்றாக்குறையையும் உருவாக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
