ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்ட விதிமுறைகளை மீறி, ஹிஜாப் அணியாமல் இணையவழி இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடியதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பெண் இசைக்கலைஞர் பரஸ்தூ அஹ்மதி என்பவருக்கு 74 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு தற்போது உலக நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாமல் இணையவழி மூலமாக இசை நிகழ்ச்சி நடத்தியதாகவும், அதன் மூலம் ஈரானின் இஸ்லாமிய கலாச்சார சட்டங்களை அவமதித்ததாகவும் பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது இசைக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஈரானிய நீதிமன்றம், பரஸ்தூ அஹ்மதிக்கு 74 சவுக்கடிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
அதோடு அவரும் அவரது இசைக்குழுவினரும் வெளிநாடுகளுக்குச் செல்லவும், இனிவரும் காலங்களில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் கலைக்கான உரிமைகள் ஈரானில் நசுக்கப்படுவதை உணர்த்தும் இந்த விவகாரம், தற்போது உலக அளவில் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
