சீனாவின் ஹைனான் மாகாணத்தில் (Hainan, China) உள்ள ஒரு ஹோட்டலில், முன்பதிவை ரத்து செய்து பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு சீனப் பெண், தான் தங்கியிருந்த அறையில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு இரவுக்கு 108 யுவான் (சுமார் $15) கொடுத்து அறையை முன்பதிவு செய்த அந்தப் பெண், அறைக்குள் நுழைந்த அரை மணி நேரத்திலேயே, ‘திட்டம் மாறியதால்’ பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.

ஹோட்டலின் கொள்கைப்படி, ஒருமுறை செக்-இன் செய்தபின் ரத்து செய்ய முடியாது என்று மேலாளர் மறுத்துள்ளார். ஆனால், அறை சரியில்லை, சத்தம் கேட்கிறது என்று கூறி, பணத்தைத் திரும்பக் கொடுப்பதில் அவர் பிடிவாதமாக இருந்துள்ளார்.

மாற்று வழியில் உதவத் தயாராக இருந்தபோதிலும், ஹோட்டல் நிர்வாகம் பணத்தைத் திரும்பக் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண், போலீசாருக்காகக் காத்திருந்தபோதே அறையைச் சேதப்படுத்தத் தொடங்கினார்.

அவர் குளியல் தொட்டி மற்றும் ஷவர் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் திறந்து, திட்டமிட்டு அறையில் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவர் படுக்கை விரிப்புகளை ஷவர் பகுதிக்குள் வீசியதுடன், அதன் மீது அழகுசாதனப் பொருட்களைக் கொட்டி அடைத்ததால், இரண்டாம் தளத்தில் இருந்த அறையின் நீர் கசிந்து கீழே இருந்த லாபி வரை சென்றது.

நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை வரை குழாய்கள் ஓடியதால், அறையின் சுவர்கள் மற்றும் தளங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. சுமார் 20,000 யுவான் ($2,800) நஷ்டம் ஏற்பட்டதாக ஹோட்டல் மதிப்பிட்டது. இதையடுத்து, போலீசார் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்தப் பெண் இறுதியாகச் சேதத்துக்காக, அசல் அறை வாடகையைவிட சுமார் 280 மடங்கு அதிகமாக, 30,000 யுவான் ($4,200) அபராதமாகச் செலுத்தியுள்ளார்.