ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஷாம் என்ற 3 வயதுச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பலூன் ஒன்றை விழுங்கியதால் ஏற்பட்ட கோரச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் பலூனை விழுங்கியதால் மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய், உடனடியாகச் சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதித்தபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விளையாட்டாக நடந்த இந்தச் சம்பவம், தாயையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலூனை விழுங்கியதால் மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டுச் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சோகச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.