புதுமை மற்றும் கடுமை சேர்த்த சமூக நீதிகாக “தாத்தாக்கள் சங்கம்” ஒன்று தற்காலிக நீதிபதியாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில், வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க மறுப்பதை தடுக்க, இந்த சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக செயலில் இருக்கிறது.
இந்த கிராமத்தில், பெற்றோர்களின் சொத்துகளை எழுதி பெற்றுவிட்டு அவர்களை வீதிக்கு வீசும் சம்பவங்கள் மிக அதிகம். இதனை மாற்றவே, 2010-ம் ஆண்டு அப்போதைய பஞ்சாயத்து தலைவர் கட்டம் ராஜி ரெட்டி, ஊரின் பெரியவர்களுடன் இணைந்து “தாத்தாக்கள் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். தற்போது இதில் 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
பிள்ளைகள் பெற்றோரை புறக்கணிக்கிறார்கள் என்ற புகார் வந்தால், இந்த சங்க உறுப்பினர்கள் நேரடியாக அந்த வீட்டுக்கு சென்று, முதலில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். எச்சரிக்கையையும் அளிக்கிறார்கள். அதிலும் பயனில்லை என்றால், அவர்கள் வீட்டின் முன் 40 பேர் கூடி அடுப்பை அமைத்து சமைத்து, வயதான பெற்றோருக்கு உணவு அளிக்கிறார்கள். பிள்ளைகளுக்கு நேரடியாக ஒரு சமூக அழுத்தம் கொடுக்க இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள்.
அதன் பிறகே அந்த பிள்ளைகள் மனம் மாறி, தங்கள் பெற்றோரை நன்றாக கவனிக்க வாக்குறுதி அளிக்கிறார்கள். பலர் முறையான எழுத்துப் பத்திரமாகவும் இதை உறுதி செய்கிறார்கள். சமூகத்தில் இவ்வாறு ஒரு தனிச்சிறப்பான முறையில் நீதியை நிலைநாட்டும் இந்த தாத்தாக்கள் சங்கம், பிற கிராமங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.
