யூனியன் பிரதேசத்தின் திமார்பூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், டெல்லி போக்குவரத்து காவலர் ஒருவர் ஒரு கும்பலால் நடுரோட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட காவலர், சப்-இன்ஸ்பெக்டர் சூரஜ் பால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக பரவியது. இதில், சிங் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது.

வீடியோவில், பழுப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த ஒருவர், சிங்கை தள்ளி, அறைந்து, பலமுறை உதைத்தும் தாக்குகிறார். மேலும், குழுவில் இருந்த மற்றொருவரும் தாக்குதலில் கலந்துகொண்டார். ஒருவராவது தலையிட முயன்றும், தாக்குதல் தொடர்ந்தது. தாக்குதலின் விளைவாக சிங்கின் நெற்றியில் இருந்து ரத்தம் வரும் அளவுக்கு  காயம் ஏற்பட்டது.

 

அந்த நபரை ஒரு பெண் இடைமறித்து அழைத்துச் செல்லும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல் ஒரு சலானைச் சுற்றிய தகராறு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது, சுற்றிலும் மக்கள் கூடியிருந்தும், யாரும் காவலருக்கு உதவ முன்வரவில்லை என்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை தொடர்ந்து, டெல்லி காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அக்பர் உசேன் மற்றும் சல்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மற்ற குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து FIR பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.