ஓசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரிக்கரையில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்காவில் “திருமணம் ஆகாதவர்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்ற பேனர் வைக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட பேனரில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை மற்றும் காவல் உதவி எண்கள் வரை இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த பொதுமக்களும், இளைஞர்களும் அதிர்ச்சி அடைந்ததுடன், சமூக வலைதளங்களில் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது.
ஓசூர் மாநகராட்சியின் கீழ் செயல்படும் இந்த பூங்கா பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு இடம். நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கருவிகள், தியான மண்டபம், மரப்பூங்கா, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என பல வசதிகள் இங்கு உள்ளது.
மேலும், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் மக்கள் வருவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக, காதல் ஜோடிகள் அந்த இடத்தில் எல்லை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்ததையடுத்து, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த காதல் ஜோடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து, சமூக ஒழுங்கை பேணும் விதமாகவே இந்த பேனர் வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும், அதற்கான அதிகாரபூர்வ அங்கீகாரம் எதுவும் இல்லை.
மேலும், காவல்துறை சார்பில் இந்த பேனரை அவர்கள் வைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பேனரில் போலீசாரின் முத்திரை எப்படி வந்தது? யார் அனுமதியின்றி இதனை வைக்க முயற்சித்தது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் வேகமாக பரவியதையடுத்து, பொதுமக்கள் இதனை விமர்சித்து வருகின்றனர்.தற்போது அந்த சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப்பட்ட நிலையில், இது யாருடைய உத்தரவின்படி நடந்தது என்பதை கண்டறிவது முக்கியமாகி இருக்கிறது.
