திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கானூரில் உள்ள புள்ளானி முக்கில் வசித்து வரும் ஓய்வுபெற்ற கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி  சதீஷனின் மகளும், மருத்துவக் கல்லூரியில் 5-ம் ஆண்டு நர்சிங் பயிலும் மாணவியுமான எஸ்.எல்.வ்ரிந்தா திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் , திடீரென உடல்நலக் குறைவால் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகிலுள்ள திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சைக்கு பலனளிக்காமல்  வ்ரிந்தா மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு சாப்பிடும் நேரத்தில், “மருத்துவமனைக்கு செல்லவேண்டும்” என்று தனது தாயிடம் கூறியவுடன் அவர் மயங்கி விழுந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போலீசார் அவரது அறையை சோதனையிட்டபோது, அங்கிருந்து ஒரு மருந்து குப்பி கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மருந்தின் அதீத பயன்பாடே மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாலராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.