கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு காகிதத்தில் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் ஆகியோர் பசை, பேப்பர் போன்றவற்றை வழங்கி அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது, ஆன்லைன் வகுப்புகள் நடந்ததால் மாணவ மாணவிகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் படிப்பது மட்டுமில்லாமல், விளையாட்டுகள் சமூக வலைதளங்கள் என ஆர்வம் காட்ட தொடங்கினர். எனவே கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு காகிதத்தில் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளித்துள்ளோம்.

அதனை மாணவர்கள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர். மாணவர்கள் தயாரித்த அலங்காரப் பொருட்கள் வகுப்பறைகளில் அலங்கரிக்கப்படும். வருகிற நான்காம் தேதி பள்ளி திறப்பு கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பேரணி நடைபெறுகிறது என கூறியுள்ளார்.