திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கனிமம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி இயக்குனர் ஸ்ரீதரன் முசிறி பூலாஞ்சேரி சென்று ஆல்பர்ட்டின் நிலத்தை ஆய்வு செய்து கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வேண்டும் என்றால் 5 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். முதலில் 3 லட்ச ரூபாய் கொடுக்க பேரம் பேசப்பட்டது.

இது தொடர்பாக ஆல்பர்ட் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆல்பர்ட் ஸ்ரீதரனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.