திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தீன தயாளன் என்பவர் வசித்து (22) வருகிறார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பாக தான் காதலித்து வந்த லாரன்ஜினா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையிலிருந்த லாரன்ஜினா தீனதயாளனிடம் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து தீனதயாளன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அவருடைய தாய் வீட்டிற்கு சென்று மனைவியிடம் பேசினார்.

ஆனால் லாரன்ஜினா நான் உன்னுடன் வரமாட்டேன் என்று தாலியை கழற்றி கீழே வைத்து விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீனதயாளன் வீட்டிற்கு திரும்பிய போது வழியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் இருந்து கீழே குதித்து விட்டார். 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த தீனதயாளனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்களால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் இடையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.